காரைக்காலம்மையாரின் அற்புதத் திருப்பதிகங்கள் முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர் இசைத்துறை காரைக்காலம்மையார் பாடியவை நான்கு நூற்களாகும். இவற்றில் இரண்டு திருப்பதிகங்கள் ஆகும். இவற்றை திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகங்கள் என்பர். திரு இரட்டை மணிமாலை ஒன்று. மற்றொன்று அற்புதத் திருவந்தாதியாகும். இந்நான்கும் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் தம்மைக் காரைக்கால் பேய் என்றே பெயரிட்டுக் கொள்கிறார். இதனால் இவர் காரைக்காலம்மையார் என்று அழைக்கப் பெறுகிறார். இவருடைய காலம் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு என்பர். 63 நாயன்மார்களில் காலத்தில் இவரே மூத்தவராக உள்ளார். முதல் இயலிசைப் புலவர்: காரைக்காலம்மையாரே இசைத் தமிழின் முதல் இயலிசைப் புலவராக விளங்குகிறார். இவர் பாடிய திருவாலங்காட்டு மூத்தத்திருப்பகங்கள் இரண்டும் இத்தன்மையைப் பெற்றுள்ளன. மூத்தத்திருப்பதிகச் சிறப்புகள்: கொங்கைத் திரங்கி என்னும் முதல் குறிப்புடைய நட்டபாடைப் பண்ணில் அமைந்த பதிகமும், எட்டியிலவம் என்று தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமும் இயலிசைப்பா பதிகங்களாக உள்ளன. பதிகம் தோறும் 11 பாடல்களைக் கொண்டுள்ளன. 11 வது பாடல் திருக்கடைக்காப்புப் பாடலாக அமைந்துள்ளது. இவர் பாடிய இவ்வமைப்பில் பிற்காலத்தில் திருமுறைகளைத் தொகுத்தவர்கள் அமைத்தனர். அற்புதத் திருவந்தாதி: இவர் பாடிய அற்புதத் திருவந்தாதி 101 பாடல்களைக் கொண்டுள்ளது. அந்தாதி யாப்பில் அமைந்துள்ளது. 101வது பாடல் பயன் கூறும் பாடலாக அமைந்துள்ளது. இந்நூல் ஓதுதற்கு எளிமையானது, இனிமையானது. திருவருள் ஞானம் பெற வழி வகுப்பது. அம்மையார் தாம் பெற்ற திருவருள் அனுபவத்தை உலகத்தாரும் பெறும் பொருட்டுப் பாடியுள்ளார். தன் நெஞ்சிற்கு அறிவுரை வழங்கும் பாடல்களாகவும், தம்மையொத்த அடியார்களின் இயல்பினை உரைக்கும் பாடல்களாகவும், இறைவனது அருட்கோலங்களை உரைக்கும் பாடல்களாகவும், திருவருட் செயல்களை முன்னிலைப்படுத்தி உரைக்கும் பாடல்களாகவும் உள்ளன. திருவிரட்டை மணிமாலை: அம்மையார் பாடிய நூல்களுள் ஒன்று திருவிரட்டை மணிமாலையாகும். கட்டளைக் கலித்துறை முன்னும் வெண்பா பின்னும் வெண்பா முறையில் அமைந்து அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. இருபது செய்யுட்களால் ஆனது. “ஆய்ந்த சீர் இரட்டை மணிமாலை” என்று சேக்கிழார் பாடிப்போற்றுகிறார். கட்டளைக் கலித்துறையின் மூத்த இலக்கியமாக இந்நூல் அமைந்துள்ளது. கட்டளைக் கலித்துறையில் 10 பாக்கள் உள்ளன. உலக வாழ்வில் கொடிய துன்பங்கள் வந்து தாக்கும் பொழுதும் உள்ளம் தளராது இறைவனை வணங்க வேண்டும் என்றும், ஈசனாகிய அவனையன்றி இவ்வுலகத்தில் எதுவும் இயங்காது என்பதனை இப்பாடல்கள் மூலம் கூறியுள்ளார். |